கடலூர் மாவட்டத்தில் டாக்டர், செவிலியர் உள்பட 59 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,619 ஆக உயர்வு


கடலூர் மாவட்டத்தில் டாக்டர், செவிலியர் உள்பட 59 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,619 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 July 2020 11:40 AM IST (Updated: 16 July 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் டாக்டர், செவிலியர் உள்பட 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,560 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1169 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 14 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 59 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களில் நல்லூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரும், பண்ருட்டியை சேர்ந்த செவிலியரும், அண்ணாகிராமத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னையில் இருந்து வடலூர், காட்டுமன்னார்கோவில், அண்ணாகிராமம் பகுதிக்கு வந்த 4 பேரும், பெங்களூருவில் இருந்து கம்மாபுரம், கடலூர் வந்த 3 பேரும், பீகாரில் இருந்து என்.எல்.சி. குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒருவருக்கும் சளி, காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உமிழ்நீர் பரிசோதனை

இதுதவிர பண்ருட்டியை சேர்ந்த கர்ப்பிணிக்கும், புவனகிரியை சேர்ந்த குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பண்ருட்டி, கடலூர், விருத்தாசலத்தை சேர்ந்த 30 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 1,344 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. நேற்று மட்டும் 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 1220 பேர் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Next Story