புதுக்கோட்டையில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று; போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் மூடல்


புதுக்கோட்டையில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று; போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் மூடல்
x
தினத்தந்தி 17 July 2020 8:42 AM IST (Updated: 17 July 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரர், ஊழியர் பாதிக்கப்பட்டதால் போக்குவரத்து போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் ஆகியவை மூடப்பட்டன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 831 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 358 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உள்ளது.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் வங்கிக்கு அருகில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் போலீசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவருக்கும், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் குழந்தைகள் 2 பேர், திருக்களம்பூரில் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 5 பேரும் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து போக்குவரத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அலுவலர்கள் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆவுடையார்கோவிலில் தாலுகா அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தாலுகா அலுவலகம் பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைத்து வர்த்தக சங்கத்தின் முடிவின்படி ஆவுடையார்கோவில் பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடை, பால் கடை மட்டுமே திறந்திருந்தன. இதேபோல் வருகிற 22-ந் தேதி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்.

அரிமளம் ஒன்றியம் கடையக்குடி ஊராட்சி இந்திராநகர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அரிமளம், மிரட்டுநிலை கிராமங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 7 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் கொரோனாவால் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 19 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். ஒருவர் இறந்துள்ளார். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story