கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்


கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2020 3:28 AM GMT (Updated: 2020-07-18T08:58:49+05:30)

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களை புதிய தாலுகாக்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கக்கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பப்பட்டது. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், வர்த்தகர்கள் சார்பிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் வீட்டு வாசலில் கோலம் வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகள் அடைப்பு

இந்த நிலையில் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகா பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பகோணம் பகுதியில் நேற்று 6 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் வடக்கு வீதி, பெரிய தெரு, மடத்து தெரு, தஞ்சை மெயின் சாலை ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பனந்தாள்-பாபநாசம்

அதேபோல திருப்பனந்தாள், அணைக்கரை, பந்தநல்லூர், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சுவாமிமலை, திருவலஞ்சுழி, கபிஸ்தலம், உள்ளிட்ட பகுதிகளிலும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசத்தில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி பாபநாசம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தெற்கு ராஜவீதி, கடைவீதி, திருப்பாலத்துறை, 108 சிவாலயம் பகுதி, வங்காரம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் பால், மருந்து கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story