குமரி மாவட்டத்தில் புதிதாக 2 டாக்டர்கள் உள்பட 145 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,280 ஆக உயர்வு


குமரி மாவட்டத்தில் புதிதாக 2 டாக்டர்கள் உள்பட 145 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,280 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 July 2020 4:21 AM GMT (Updated: 2020-07-18T09:51:15+05:30)

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 145 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,280 ஆக உயர்ந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இதுவரை 16 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் வரையில் 2135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 1150 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி, தனியார் பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, தக்கலை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

145 பேருக்கு பாதிப்பு

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் குமரி மாவட்டத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 83 பேர், பெண்கள் 45 பேர், சிறுவர்கள் 17 பேர் அடங்குவர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,280 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பயிற்சி டாக்டர்கள் 2 பேரும் அடங்குவர். அவர்கள் கொரோனா வார்டில் பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது. 2 பேரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நாகர்கோவிலில்...

பாதிக்கப்பட்டவர்களில் மற்றவர்கள் மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் சுண்டபற்றிவிளை, வத்தக்காவிளை, கருங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாகர்கோவிலில் மட்டும் நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.இதற்கிடையே மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஜவுளிக்கடை உரிமையாளர் ஏற்கனவே நோய்வாய்பட்டு இருந்தார். அவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Next Story