கிராம நிர்வாக அதிகாரி வழங்கியது போல் இ-பாஸ் பெற போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் போலீசார் விசாரணை


கிராம நிர்வாக அதிகாரி வழங்கியது போல் இ-பாஸ் பெற போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 July 2020 4:26 AM IST (Updated: 19 July 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

இ-பாஸ் பெற கிராம நிர்வாக அதிகாரி வழங்கியது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த திருப்பூரை சேர்ந்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,


கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக இ-பாஸ் வழங்கப்படுகிறது. வெளியூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் வழங்குகிறது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க நேற்று ஒருவர் வந்திருந்தார். இறப்பு நிகழ்வுக்காக திருப்பூரில் இருந்து வெளியூர் செல்வதற்காக இ-பாஸ் வேண்டும் என்று கேட்டார். அதில் திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த ஒருவர் இறந்ததற்கு இறப்பு உறுதி சான்றிதழை, கருவம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி கையெழுத்திட்டு வழங்கியதைப்போல் சான்றிதழ் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருப்பூர் நகர கிராம நிர்வாக அதிகாரி மட்டுமே உள்ளார். கருவம்பாளையம் கிராமத்துக்கு கிராம நிர்வாக அதிகாரி கிடையாது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் இந்த சான்றிதழை பெரியாண்டிப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் பெற்றுத்தந்ததாக கூறினார்.

போலி சான்றிதழ் தயாரிப்பு

இதைத்தொடர்ந்து திருப்பூர் நகர கிராம நிர்வாக அதிகாரி குமார் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நகர கிராம நிர்வாக அதிகாரி போல் போலியாக கையெழுத்திட்டு சீல் வைத்து இறப்புக்கான உறுதிச்சான்று வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சந்தோஷ் மற்றும் அவருடன் தொடர்புடைய கும்பல் இந்த போலி சான்றிதழை தயாரித்தது தெரியவந்தது.

மேலும் இதுபோல் போலியாக சான்றிதழ் தயாரித்து கடந்த 10-ந்தேதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட இ-பாஸ் பெறப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கும்பல் மண்ணரை, தொட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியை போல் போலியாக கையெழுத்திட்டு சான்றிதழ் தயாரித்து ஏற்கனவே இ-பாஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து சந்தோஷ் மற்றும் அவருடன் தொடர்புடைய கும்பல் மீது மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இ-பாஸ் பெற கிராம நிர்வாக அதிகாரி போல் போலியாக சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story