நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் 1,100 படுக்கைகள் தயார் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் 1,100 படுக்கைகள் தயாராக உள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
நெல்லை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நெல்லை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டாக்டர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். அப்போது காணொலி காட்சி மூலம் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகமும், நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி நிர்வாகமும் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார். இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பழங்களை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், டீன் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற டீன் கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 1,265 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 1,266 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி தற்போது கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1,100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிப்பதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளன. தலைசிறந்த ஆஸ்பத்திரியாக உள்ளது.
மக்கள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பார்க்கக்கூடாது. குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, அவர்களுடைய நிலையை பார்க்க வேண்டும். மக்களை காப்பாற்ற அரசு தயாராக உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 385 யூனியன் அளவிலான மருத்துவமனைகள் 30 படுக்கை வசதிகளுடன் உள்ளன. ரூ.75 கோடியில் ஆக்சிஜன் வழங்கக்கூடிய கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. ஒருவருக்கு 5 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
பிளாஸ்மா சிகிச்சை தமிழகத்தில் 4 ஆஸ்பத்திரிகளில் தற்போது அளிக்கப்படுகிறது. விரைவில் நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் இந்த சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும். ரத்த தானம், உடல் தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் பிளாஸ்மா தானம் வழங்க அனைவரும் முன்வர வேண்டும். நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அவர் பிளாஸ்மா தருவதற்கு தயாராக உள்ளார். கொரோனா வார்டில் பணியாற்ற தமிழகத்தில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் விருப்பம் தெரிவித்து பணியாற்றி வருகிறார்கள்.
நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவம் அதிக அளவில் நடந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story