ஊட்டியில் தொடர் மழை: சேறும் சகதியுமான உழவர் சந்தை மைதானம் இடமாற்றம் செய்ய கோரிக்கை


ஊட்டியில் தொடர் மழை: சேறும் சகதியுமான உழவர் சந்தை மைதானம் இடமாற்றம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2020 4:58 AM GMT (Updated: 19 July 2020 4:58 AM GMT)

ஊட்டியில் தொடர் மழையால் உழவர் சந்தை செயல்படும் மைதானம் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராசில் உழவர் சந்தை உள்ளது. தடுப்பு நடவடிக்கையாக அங்கிருந்த கடைகள் ஏ.டி.சி.யில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டு திறந்தவெளி சந்தையாக செயல்பட்டு வருகிறது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நீலகிரியில் விளையும் காய்கறிகள் மட்டுமல்லாமல், சமவெளிகளில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. காய்கறிகளை ஏற்றி, இறக்க சரக்கு வாகனங்கள் வந்து செல்வதால் சேறும், சகதியுமாக மாறியது. ஒரு பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் கடைகள் மைதானத்தின் நடுவே மாற்றப்பட்டது. நேற்று மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அதன் ஓரத்தில் உள்ள கடைகளுக்கு காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் நடந்து சென்று வர முடியாமல் அவதி அடைந்தனர். எங்கே தாங்கள் சேற்றில் வழுக்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் மக்கள் மைதானத்தை பார்த்த உடனே திரும்பி செல்வதை காண முடிந்தது.

அனுமதிக்க வேண்டும்

கடைகளுக்கு முன்பாக சேறும் சகதியும் நிறைந்து காணப்படுவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் விற்பனை செய்யப்படும் பொருட்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் திணறி வருகின்றனர். காலணி முழுவதும் சகதி ஆவதால் மக்கள் முகம் சுளிக்கின்றனர். முன்புற கடைகளில் மட்டும் மக்கள் பொருட்களை வாங்குவதால் ஒரே இடத்தில் அதிக கூட்டம் கூடுகிறது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சகதிக்கு நடுவே வியாபாரம் செய்ய முடியாமல் சிலர் கடைகளை மூடிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தொடர் மழையால் காந்தி விளையாட்டு மைதானம் சேறும் சகதியுமானது. இதை கற்கள், மணல் கொட்டி சீரமைக்க முடியாது. வருகிற நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவ- மாணவிகள் மைதானத்தில் விளையாடும் போது காயம் ஏற்படும். தற்போது மழையால் பொருட்களும் நனைந்து பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மைதானத்தில் அமைக்கப்பட்ட கடைகளை மீண்டும் உழவர் சந்தைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுழற்சி முறையில் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அங்கு மேற்கூரை இருப்பதால் பொருட்கள் நனையாமல் இருக்கும் என்றனர்.

Next Story