கோவையில் மூதாட்டிகள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி


கோவையில் மூதாட்டிகள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 20 July 2020 9:07 AM IST (Updated: 20 July 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மூதாட்டிகள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

கோவை,

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி அவர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரை கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க டாக்டர் கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் கோவை வின்சென்ட் ரோட்டை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த 17-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருணாச்சலம் தேவர் காலனியை சேர்ந்த 74 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் கடந்த 10-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

78 வயது முதியவர்

கோவை ஹோப் காலேஜ் லட்சுமிபுரத்தை சேர்ந்த 78 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 13-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்தவர்கள் 4 பேரின் உடல்களும் பாதுகாப்பான முறையில் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல் அருகில் செல்லவோ, தொடுவதற்கோ உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பெரம்பலூரை சேர்ந்தவர்

பெரம்பலூர் நால்ரோடு பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 14-ந் தேதி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக 15-ந் தேதி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவுக்கு பலியானதால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படாமல் கோவையிலேயே தகனம் செய்யப்பட்டது.

35 ஆக உயர்வு

பொள்ளாச்சி குமரன்நகரை சேர்ந்த 75 வயது மூதாட்டி காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்றே அவர் இறந்தார். அடுத்த நாள் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு நேற்றுதான் வெளியானது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் 4 பேர் இறந்தனர். அதுபோன்று 8-ந் தேதி இறந்த மூதாட்டிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story