கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி போலீசார், செவிலியர்கள் உள்பட 45 பேருக்கு பாதிப்பு


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி போலீசார், செவிலியர்கள் உள்பட 45 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 11:19 AM IST (Updated: 20 July 2020 11:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 68 வயது மூதாட்டி பலியானார். போலீசார், செவிலியர்கள் உள்பட 45 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களில் புவனகிரி, கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளை சேர்ந்த 2 போலீசார், 3 செவிலியர்கள், 3 சுகாதார பணியாளர், ஒரு பேரூராட்சி பணியாளர் என 9 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்களை தவிர சென்னையில் இருந்து காட்டுமன்னார்கோவில், விருத்தாசலத்திற்கு வந்த 2 பேர், பெங்களூருவில் இருந்து பரங்கிப்பேட்டை வந்த ஒருவர், மராட்டிய மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவர், துபாய் நாட்டில் இருந்து குமராட்சி, பரங்கிப்பேட்டை, மங்களூர் வந்த 3 பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டியை சேர்ந்த 3 பேர், கடலூரை சேர்ந்த மார்பக புற்று நோய் ஏற்பட்ட பெண், புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள 5 கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இது மட்டுமின்றி நோய் தொற்று அறிகுறிகளுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 12 பேர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த குமராட்சி, விருத்தாசலத்தை சேர்ந்த 8 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில் கடலூர் வில்வநகரை சேர்ந்த 68 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியானார். இது பற்றிய விவரம் வருமாறு:-

மூதாட்டி பலி

கடலூர் வில்வநகரை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோய், மூச்சு திணறல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவு வருவதற்குள் கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவருக்கு பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் நகராட்சி அதிகாரிகள், அந்த பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மாவட்டத்தில் நேற்று 35 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1382 ஆக உயர்ந்தது.

பரிசோதனை

கொரோனா பாதிக்கப்பட்ட 272 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 97 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 37 ஆயிரத்து 69 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 1766 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,500 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். நேற்று 186 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1,686 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story