கொரோனாவுக்கு நெல்லையைச் சேர்ந்தவர் பலி: போலீஸ் உதவி சூப்பிரண்டு உள்பட 156 பேருக்கு கொரோனா


கொரோனாவுக்கு நெல்லையைச் சேர்ந்தவர் பலி: போலீஸ் உதவி சூப்பிரண்டு உள்பட 156 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 July 2020 9:23 AM IST (Updated: 21 July 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலியானார். போலீஸ் உதவி சூப்பிரண்டு உள்பட 156 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,718 ஆக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனோ தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது மாவட்ட மக்களையும், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 1300-க்கும் மேற்பட்டோர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி, தனியார் பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையங்கள், தக்கலை அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதியவர் சாவு

இந்தநிலையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கடுமையான மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் மதியம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நள்ளிரவில் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

உதவி சூப்பிரண்டு

குமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 156 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 87 பேர், பெண்கள் 61 பேர், சிறுவர்கள் 8 பேர் அடங்குவர். குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மாலை தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று இரவு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சீரான உடல்நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.போலீஸ் உயர் அதிகாரிகளில் ஒருவரான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குமரி மாவட்ட காவல்துறையையே அதிர்ச்சிக்கும், அச்சத்துக்கும் ஆளாக்கியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் இவர் தீவிரமாகவும், ஆர்வமுடனும் ஈடுபட்டதால் யார் மூலமாவது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பணியாற்றிய குளச்சல் உதவி சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மூடப்பட்டது. மேலும் இவருடைய கார் டிரைவர், இவருடைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அலுவலகத்தில் பணியாற்றும் போலீசார், குடும்பத்தினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

2718 ஆக உயர்வு

நேற்று ஒரே நாளில் நாகர்கோவில் நகரில் மட்டும் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 156 பேருடன் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,718 ஆக உயர்ந்துள்ளது. 180 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Next Story