சந்தை ஏலத்தை ரத்து செய்யக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனம் முற்றுகை - நாகை அருகே பொதுமக்கள் போராட்டம்

நாகை அருகே சந்தை ஏலத்தை ரத்து செய்யக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாங்கண்ணி,
நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சியில் சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பரவை கிராமத்தில் உள்ள இடத்தில் தினசரி சந்தை இயங்கி வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சந்தையானது வேறு இடத்துக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த சந்தை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏலம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கொரோனா ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஏலம் நடத்த கூடாது. கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் 15 சதவீத வரி, தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்கு செலுத்தவில்லை. எனவே இந்த ஆண்டு ஏலத்தை அறநிலையத்துறை விட அனுமதிக்க கூடாது என்று ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், கோவில் செயல் அலுவலர் சண்முகராஜ் முன்னிலையில் நேற்று பரவை சந்தையில் ஏலம் விடுவதற்காக அதிகாரிகள் வந்தனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள், கோவில் மற்றும் பரவை சந்தை அமைந்துள்ள இடத்தை தெற்கு பொய்கை நல்லூர் பகுதி மக்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். எனவே ஏலம் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு முற்றுகையிட்டனர்.
அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள், பரவை சந்தை அமைந்துள்ள இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. எனவே ஏலம் விடுவதை யாரும் தடை செய்யக்கூடாது. ஏலம் கேட்டபவர்கள், ஏலம் கேட்கலாம். ஏலம் கேட்க விருப்பம் இல்லாதவர்கள் கலைந்து செல்லலாம் என்று கூறினார்கள். இதை மீறி ஏலத்தை தடை செய்பவர்கள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடும் பணி தொடங்கியது. 10-க்கும் மேற்பட்ட நபர்கள் முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் கேட்க ஆரம்பித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் ஏலத்தொகை ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் என முடிவு செய்யப்பட்டது. ஏலம் முடிவு பெற்றதாக அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிக்கும் நேரத்தில் தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரன், ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி ஏலம் நடத்த கூடாது.
ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் தெற்கு பொய்கை நல்லூர் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய 15 சதவீத வரியை அறநிலையத்துறை செலுத்தவில்லை. எனவே பரவை சந்தையில் நடைபெறும் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் கடிதம் பெற்றுள்ளதை கொண்டு வந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் காண்பித்தார்.
ஆனால் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஏலம் நடைபெறுவதற்கான காலம் நிறைவு பெற்று விட்டது. எனவே ஏலத்தை ரத்து செய்ய முடியாது. இறுதியாக ஏலத்தொகை முடிவு செய்யப்பட்ட நபருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு ஜீப்பில் ஏறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஜீப்பை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர். இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story