ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 10 பேர் பலி


ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
x
தினத்தந்தி 27 July 2020 6:24 AM IST (Updated: 27 July 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை சிறப்பு வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

வேலூர் தோட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 58). இவர், 5-ந்தேதி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்ந்தார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாகக் கவனித்து வந்தனர். அவருக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் வேலூரை அடுத்த இடையஞ்சாத்து ராஜாநகரைச் சேர்ந்த வர்கீஸ் (87) என்பவர் 8-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

உறவினர்களிடம் பிணம் ஒப்படைப்பு

வேலூர் சைதாப்பேட்டை கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (61). இவர், 22-ந்தேதி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 10 மணியளவில் இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா நவல்பூரைச் சேர்ந்த அப்துல் (58) என்பவர் 2-ந்தேதி அதே மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

அரக்கோணம் தாலுகா மின்னல் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (82) என்பவர் 7-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 19 நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 5 பேரின் உடல்களும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்டு கம்பிக்கொல்லை மயானத்தில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் மூலம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 6 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் திருவண்ணாமலை, ஆரணியில் கொரோனாவுக்கு 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது வாலிபர் கொரோனா அறிகுறியால் கடந்த 19-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24-ந் தேதி அவர் உயிரிழந்தார்.

அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா அறிகுறியால் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

2 மாத குழந்தை

ஆரணியை அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த 60 வயதான தச்சுத் தொழிலாளிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு மயானத்தில் வருவாய்த்துறையினர், ஊராட்சி சார்பில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் ஆரணி ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 2 மாத குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24-ந் தேதி பரிதாபமாக இறந்தது.

மேலும் ஆரணி நகரில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதார துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறை உதவியுடன் கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதன் மூலம் ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மாத குழந்தை உள்பட 10 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

Next Story