சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை மின்சாரம் துண்டிப்பு; சாலைகளில் மழைநீர் தேங்கியது


சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை மின்சாரம் துண்டிப்பு; சாலைகளில் மழைநீர் தேங்கியது
x
தினத்தந்தி 29 July 2020 4:17 AM IST (Updated: 29 July 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பல இடங்களில் மேகமூட்டத்துடன் காட்சியளித்தாலும், ஏதாவது ஒரே ஒரு பகுதியில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் சென்னையில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. மழைக்கு வாய்ப்பே இல்லை என்பது போன்றே பிற்பகல் 2 மணிவரை வானிலை நிகழ்வுகள் இருந்தன. ஆனால் திடீரென்று கருமேகக்கூட்டங்கள் சூழ்ந்து சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், குரோம்பேட்டை, பூந்தமல்லி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டியது. சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் பரவலாகவே இந்த மழை பெய்து இருந்தது.

சாலைகளில் தண்ணீர்

வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அதுமட்டுமில்லாமல் தாழ்வான பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. திடீர் மழையால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முழுவதும் நனைந்தபடி கடந்து சென்றனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி கடந்து சென்றதை பார்க்கமுடிந்தது. நேற்று அதிகபட்சமாக 2 மணிநேரம் பெய்த மழைக்கே சென்னையில் பல இடங்கள் நிலைகுலைந்து போனது. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மின்சாரம் துண்டிப்பு

தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்பட புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவியது.

கடல் காற்று உள்ளே புகுந்ததால், மேகக்கூட்டங்கள் திரளாக கூடி சென்னையில் மழையை கொட்டியதாகவும், அதிகபட்சமாக குரோம்பேட்டையில் 6 செ.மீ. மழை பதிவானதாகவும், இன்றும் (புதன்கிழமை) சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஐதராபாத்தில் இருந்து 220 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், மதுரையில் இருந்து 75 பயணிகளுடன் வந்த விமானம், வாரணாசியில் இருந்து 78 பயணிகளுடன் வந்த விமானம் ஆகியவை பலத்த மழை, சூறை காற்றால் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதேபோல் 45 பயணிகளுடன் டெல்லியில் இருந்து வந்த விமானமும், 69 பயணிகளுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்டநேரமாக வட்டமடித்தன. மழையின் வேகம் குறைந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் 2 மணி நேரத்துக்கு பிறகு ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு திரும்பி வந்தன.

Next Story