கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தற்காலிக ரத்து


கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 30 July 2020 3:32 AM IST (Updated: 30 July 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு மெஜஸ்டிக்கையொட்டி காந்தி நகரில் கபாலி தியேட்டர் அருகே புதிதாக 4 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 50 அடிக்கும் மேல் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய கட்டிடம் கட்டப்படும் பகுதியையொட்டி இருந்த 3 மற்றும் 4 மாடி கட்டிடங்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிடங்களில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடத்தில் இருந்த தங்கும் விடுதியில் தங்கி இருந்த 35 பேர் நேற்று முன்தினம் காலையில் தான் மாநகராட்சி அதிகாரிகளால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்தனர்.

இதன் காரணமாக 35 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாகி விட்ட புதிய கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியை நேற்று மாநகராட்சி மேயர் கவுதம் குமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் தனித்தனியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மஞ்சுநாத் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுமதி ரத்து

பெங்களூரு காந்திநகரில் உள்ள கபாலி தியேட்டரையொட்டி புதிதாக வணிகவளாகம் அமைக்க தரை தளத்துடன் 4 மாடி கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் உரிமையாளர் அனுமதி வாங்கியுள்ளார். அதற்காக 50 அடிக்கும் மேல் குழியை தோண்டி இருக்கிறார்கள். அந்த குழியை சுற்றி முன்எச்சரிக்கையாக தடுப்பு சுவர்கள் எதுவும் அமைக்காமல் உரிமையாளர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதற்கு புதிய கட்டிடம் கட்டும் உரிமையாளரே முழு பொறுப்பு ஆவார். இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு, புதிய கட்டிடத்தின் உரிமையாளரே இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மண் அரிப்பு ஏற்படுவது பற்றி அறிந்ததும் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களை மாநகராட்சி முன் எச்சரிக்கையாக காலி செய்திருந்தது.

இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான புதிய கட்டிடத்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story