ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரம் ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டம்


ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரம் ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 29 July 2020 10:48 PM GMT (Updated: 29 July 2020 10:48 PM GMT)

சென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ,இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் ரூ.50.80 கோடி செலவில் கட்டப்படுகிறது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

நினைவிடப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

செப்டம்பரில் ஒப்படைப்பு

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. சமாதி அருகில் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்படுகிறது.

தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆலோசனைப்படி கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

ஆகஸ்டு மாதம் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். அதற்கு பிறகு பீனிக்ஸ் பறவையாக ஜெயலலிதா நினைவிடம் காட்சி தரப்போகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story