அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு


அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2020 11:37 PM GMT (Updated: 29 July 2020 11:37 PM GMT)

அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவுரு எழுத்தராக பணியாற்றி வந்தவர் கனகசபாபதி (வயது 55). இவர் மணிமுத்தாறு பள்ளிக்கூட தெருவில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கனகசபாபதி திடீரென இறந்து விட்டதாக கூறி, நேற்று காலை உறவினர்கள் அவரது உடலை புதைக்க இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கனகசபாபதி தலையில் ரத்தக்காயம் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுபற்றி கல்லிடைகுறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசில் புகார்

அதன்பேரில், போலீசார் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கனகசபாபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம சாவு குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அம்பை துணை சூப்பிரண்டு சுபாஷினி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்களும் கனக சபாபதியின் வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கோர்ட்டு ஊழியர் மர்மமான முறையில் இறந்ததும், அவரது உடலை புதைக்க முயன்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story