வேலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 126 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்தது


வேலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 126 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 30 July 2020 6:07 AM IST (Updated: 30 July 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் உள்பட 126 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொற்று பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரை வீடுகளில் தனிமைப்படுத்தி, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ பெட்டகங்கள் வழங்கி வருகிறது. மேலும் அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்படுகிறது.

ஆனாலும் மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 126 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதில், 44 பேர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

டாக்டர்கள், நர்சுகள்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், 5 டாக்டர்கள், 6 நர்சுகள், லேப் டெக்னீசியன் ஒருவர், கேன்டீன் ஊழியர் ஒருவர் ஆகிய 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 12 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் டோல்கேட் உழவர்சந்தை காய்கறி வியாபாரி, சென்னை பள்ளிகல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் வேலூரை சேர்ந்த ஊழியர், மளிகைக்கடை ஊழியர், ஷூ கம்பெனி தொழிலாளி, ஜெயில் குடியிருப்பில் ஒருவர், கொணவட்டத்தில் ஒரு வயது ஆண்குழந்தை, பெருமுகையில் 3 வயது ஆண்குழந்தை, பில்டர்பெட் சாலையில் 8 வயது சிறுமி, கொசப்பேட்டையில் 81 வயது முதியவர் உள்பட மாவட்டம் முழுவதும் 126 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story