மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 3:45 AM IST (Updated: 31 July 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதும் நோய் பாதிப்பு காட்டு தீயாக பரவி வருகிறது. இதில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 11 ஆயிரத்து 147 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 798 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 615 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் குணமானவர்கள் சதவீதம் 60.37 ஆக உள்ளது.

266 பேர் பலி

மாநிலத்தில் மேலும் 266 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 729 ஆகி உள்ளது. உயிரிழந்தவர்கள் சதவீதம் 3.58 ஆக உள்ளது.

மராட்டியத்தில் 20 லட்சத்து 70 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.89 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் மும்பையைவிட மற்ற பகுதிகளில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக புனே மாநகராட்சி பகுதியில் புதிதாக 1,889 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 987 பேருக்கும், கோலாப்பூரில் 348 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தானே, பிம்பிரி சிஞ்வாட் மாநகராட்சிகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

முக்கிய பகுதிகள்..

முக்கிய பகுதிகளில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி- 20,181 (700 பேர் பலி), தானே புறநகர்- 13,247 (283), நவிமும்பை மாநகராட்சி- 16,658 (437), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி- 22,286 (425), உல்லாஸ் நகர் மாநகராட்சி- 6,992 (147), பிவண்டி மாநகராட்சி- 3,804 (262), மிரா பயந்தர் மாநகராட்சி- 8,616 (271), வசாய் விரார் மாநகராட்சி- 11,853 (282), ராய்காட்- 9,156 (204), பன்வெல் மாநகராட்சி- 7,005 (159). நாசிக் மாநகராட்சி- 9,332 (255), புனே மாநகராட்சி- 56,924 (1,295), பிம்பிரி சிஞ்வட் மாநகராட்சி- 20,177 (348).

Next Story