வனத்துறை விசாரணையின்போது கடையம் விவசாயி மரணம்: உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய 3 டாக்டர்கள் நியமனம்


வனத்துறை விசாரணையின்போது கடையம் விவசாயி மரணம்: உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய 3 டாக்டர்கள் நியமனம்
x
தினத்தந்தி 31 July 2020 12:28 AM GMT (Updated: 31 July 2020 12:28 AM GMT)

வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி மரணம் அடைந்த சம்பவத்தில், அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய 3 டாக்டர்களை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த பாலம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர், அணைக்கரைமுத்து. விவசாயி. கடந்த 22-ந்தேதி எங்கள் வீட்டுக்கு வந்த வனத்துறையினர், எனது கணவரை விசாரணைக்காக தங்களின் சிவசைலம் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கு அணைக் கரைமுத்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வனத்துறையினர் தாக்கியதால்தான் அவர் இறந்துள்ளார். உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அவரது உடலை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

18 இடங்களில் காயம்

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் வீட்டுக்கு கடந்த 22-ந்தேதி இரவு 11 மணி அளவில் வனத்துறையினர் வந்து மனுதாரரின் கணவரை தங்களின் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அவரை சிவசைலம் வனத்துறை பங்களாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்து அணைக்கரைமுத்துவின் மகன் பிரபாகரன், உறவினர் ஆறுமுககுமார் உள்ளிட்ட 3 பேர் காரில் சிவசைலம் சென்ற போது, எதிரில் வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அணைக்கரைமுத்து சுயநினைவு இன்றி கொண்டு வரப்பட்டுள்ளார்.

அந்த வாகனத்தை நிறுத்தி, பிரபாகரன் தனது தந்தையை தொட்டு பார்த்தபோது அவர் உணர்வின்றி இருந்தார். பின்னர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அணைக்கரைமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இரவு பரிசோதனையை ஏற்க முடியாது

இதையடுத்து அணைக் கரைமுத்துவின் உடலை மாஜிஸ்திரேட்டு சோதித்தபோது, 18 இடங்களில் வெளிக்காயங்கள் இருந்ததாக கூறி, அவரின் உறவினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார்.

கோர்ட்டு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் இரவு நேரத்தில் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அணைக் கரைமுத்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாதல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை நடத்துவதற்கு தமிழ்நாடு மருத்துவ விதிகள் அறிவுறுத்தவில்லை.

பிரேத பரிசோதனைகள் சூரிய ஒளியுடன் கூடிய மின்விளக்குகளின் வெளிச்சத்தில் நடத்தப்பட்டால்தான் உடல்களில் இருக்கும் காயங்களை அறிய முடியும். சில அவசர காலங்கள், பேரழிவு நேரங்களில் மட்டும் மாலை, இரவு நேரங்களில் இதை செய்யலாம் என விதிகள் கூறுகின்றன. மனுதாரரின் கணவர் உடலை அவசரமாக பரிசோதனை செய்ததற்கு சட்டம்- ஒழுங்குதான் காரணம் என கூறுவதை ஏற்க முடியாது.

மறுபரிசோதனைக்கு உத்தரவு

எனவே நெல்லை மருத்துவக்கல்லூரி தடயவியல் மருத்துவத்துறை தலைவர் செல்வமுருகன், தடயவியல் இணை பேராசிரியர் பிரசன்னா, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் சுடலைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள், அணைக்கரைமுத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும். இதை வீடியோ பதிவு செய்வது உள்ளிட்டவைகளுக்கான வசதிகளை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் செய்து தர வேண்டும்.

ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டதன் அறிக்கை மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story