மாவட்டத்தில், கடந்த மாதத்தில் 30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 30 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி கூறினார்.
தர்மபுரி,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 30 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். விடுமுறை எடுக்கும் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு மாணவிகளை கண்காணிப்பதால் குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க முடியும்.
தர்மபுரி மாவட்டத்தில் மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் ஏற்படாததால் தமிழகஅரசு தர்மபுரி மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. 2001-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 826 பெண்கள் என்றிருந்த பிறப்பு விகிதம், 2011-ம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 913 பெண்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.
ஊக்கத்தொகை
இந்த கூட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1,579 பெண் குழந்தைகள் என்ற பிறப்பு விகிதத்துடன் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்ட வத்தல் மலை ஆரம்ப சுகாதார நிலையம், பெண் குழந்தைகள் அதிகம் பிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட காரிமங்கலம் ஒன்றியம் கெரகோடஅள்ளி ஊராட்சி ஆகியவற்றிற்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) நாகலட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், வட்டார சமூக நல அலுவலர்கள், டாக்டர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story