சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகள் மறுப்பு கொரோனா பாதித்த பெண் சாவு குழந்தை பெற்ற 6 நாளில் உயிரிழந்த பரிதாபம்


சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகள் மறுப்பு கொரோனா பாதித்த பெண் சாவு குழந்தை பெற்ற 6 நாளில் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 31 July 2020 10:55 PM GMT (Updated: 31 July 2020 10:55 PM GMT)

பெங்களூருவில், சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகள் மறுத்ததால் கொரோனாவால் பாதித்த பெண் உயிரிழந்தார். குழந்தை பெற்ற 6 நாட்களில் அவர் உயிரிழந்த பரிதாபம் நடந்து உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அந்த பெண் ராஜாஜிநகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து இருந்தது. இதையடுத்து அந்த பெண் 6 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பெண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த பெண்ணை, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரேபிட் ஆன்டிஜென் கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்ணுக்கு வைரஸ் தொற்று பாதித்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து வென்டிலேட்டர் வசதி இல்லை என்று கூறி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மறுத்து விட்டது.

பெண் சாவு

இதன்பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொரோனா பீதியால் மருத்துவமனையில் படுக்கை இல்லை, வென்டிலேட்டர் வசதி இல்லை என்று காரணங்களை கூறி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்து விட்டன.

இதுகுறித்து ஜெயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுமியா ரெட்டிக்கு, பெண்ணின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க உதவும்படி, மருத்துவமனைகளுக்கு கோரிக்கை விடுத்து சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவை பார்த்த பொம்மசந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனை பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது.

இதனால் அந்த பெண் நேற்று அதிகாலை 4 மணிக்கு பொம்மசந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பெண் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினர், பெண்ணின் உடலை பெற்று சென்று அடக்கம் செய்தனர்.

பரபரப்பு

இதற்கிடையே சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்து இருந்தால் பெண் உயிர் பிழைத்து இருப்பார் என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு பெண் இறந்து உள்ளதால் அவரது குழந்தை, குடும்பத்தினர், பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story