கடையநல்லூர் அருகே பயங்கரம்: காதல் விவகாரத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் அடித்துக்கொலை - பொக்லைன் ஆபரேட்டர் கைது


கடையநல்லூர் அருகே பயங்கரம்: காதல் விவகாரத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் அடித்துக்கொலை - பொக்லைன் ஆபரேட்டர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2020 4:15 AM IST (Updated: 1 Aug 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே காதல் விவகாரத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பொக்லைன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன்ராஜ் (27). பொக்லைன் ஆபரேட்டரான இவரும், நாகராஜனின் பட்டதாரி மகளும் கடந்த 1½ ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகராஜன் தனது மகளுக்கு பக்கத்து ஊரான சீவநல்லூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் பேசி, நிச்சயம் செய்திருந்தார். இதனை அறிந்த முருகன்ராஜ் ஆத்திரம் அடைந்தார். அவர் நாகராஜனின் மகளை காதலித்தது தொடர்பான விவரங்களை செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து, அதனை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் செல்போனுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த நாகராஜன் தனது உறவினர்கள் சிலருடன், கடந்த 30-ந்தேதி கண்மணியாபுரம் சென்று முருகன்ராஜை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளாலும், கம்புகளாலும் தாக்கி மோதிக்கொண்டனர்.

இதில் நாகராஜன், முருகன்ராஜ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். படுகாயங்களுடன் இருந்த நாகராஜனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், முருகன்ராஜை தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நாகராஜன் நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து முருகன்ராஜை கைது செய்தனர். அவருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story