பெங்களூரு அருகே வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


பெங்களூரு அருகே வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2020 3:37 AM IST (Updated: 2 Aug 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே, வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுனை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் நெலமங்களா கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவருக்கும் அரசினகுட்டே பகுதியை சேர்ந்தவர் நந்தினி(வயது 28) என்பவருக்கும் திருமணம் நடந்து இருந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்தின் போது ரங்கசாமிக்கு, நந்தினியின் பெற்றோர் நகைகள் மற்றும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து உள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கூடுதலாக வரதட்சணை கேட்டு நந்தினியை, ரங்கசாமி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு நந்தினி மறுத்து உள்ளார். இதுதொடர்பாக நந்தினிக்கும், ரங்கசாமிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. மேலும் வரதட்சணை வாங்கி வராததால் நந்தினியை, ரங்கசாமி அடித்து, உதைத்து தாக்கி வந்ததாக தெரிகிறது. இதனால் நந்தினி மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து நந்தினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி, நந்தினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த பெற்றோர், நந்தினியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெலமங்களா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நந்தினியை, ரங்கசாமி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறி நெலமங்களா போலீஸ் நிலையம் முன்பு நந்தினியின் உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வரதட்சணை கொடுமையால் தான் நந்தினி தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ரங்கசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நந்தினியின் தாய் புட்டம்மா, நெலமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக ரங்கசாமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story