கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு வைரஸ் தொற்று - பாதித்த மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு


கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு வைரஸ் தொற்று - பாதித்த மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 Aug 2020 11:45 PM GMT (Updated: 3 Aug 2020 9:41 PM GMT)

கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. மாநிலத்தில் ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, 3 மந்திரிகள், 2 எம்.பி.க்கள், 17 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.எல்.சி.க்கள் என 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நாகனகவுடா. இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நாகனகவுடாவும், அவரது மூத்த மகன் மல்லிகார்ஜூனாவும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அவர்கள் யாதகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று நாகனகவுடா, மல்லிகார்ஜூனாவின் மருத்துவ அறிக்கை சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. அதில் நாகனகவுடா எம்.எல்.ஏ.வுக்கும், அவரது மகன் மல்லிகார்ஜூனாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை நாகனகவுடா எம்.எல்.ஏ.வின் இளைய மகன் சரணகவுடாவுடம் உறுதிப்படுத்தி உள்ளார். நாகனகவுடா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதித்தது குறித்து சரணகவுடா தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில், எனது தந்தை(நாகனகவுடா), சகோதரர் மல்லிகார்ஜூன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த சில தினங்களாக எனது தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். மக்கள் ஆசிர்வாதத்தால் எனது தந்தை விரைவில் குணம் அடைந்து, மக்கள் பணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சாம்ராஜ்நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. புட்டரங்கஷெட்டிக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எலந்தூரில் புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்தார். முன்னதாக அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது.

உறவினரின் இறுதிச்சடங்கில் புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ.வும், அவரது மகனும் கலந்து கொண்டு இருந்தனர். இதற்கிடையே இறந்த உறவினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. மகனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக பணியாற்றியவர் ஆவார்.

நாகனகவுடா, புட்டரங்கஷெட்டி ஆகிய எம்.எல்.ஏ.க்களை சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்து உள்ளது. கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து கொரோனா தாக்கி வருவதால் அவர்களும், கட்சி தொண்டர்களும் பீதியில் இருந்து வருகிறார்கள்.

Next Story