புதுச்சேரியில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் புதிதாக 178 பேருக்கு தொற்று


புதுச்சேரியில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் புதிதாக 178 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 4 Aug 2020 12:15 AM GMT (Updated: 3 Aug 2020 10:06 PM GMT)

புதுச்சேரியில் புதிதாக 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் நேற்று முன் தினம் 782 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதுச்சேரியில் 125 பேர், காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 42 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 37 பேர், ஜிப்மரில் 22 பேர், கொரோனா அறிகுறியுடன் 66 பேர், காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 42 பேர், மாகியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 256 பேர், ஏனாமில் 17 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று கதிர்காமம் மருத்துவமனையில் 22 பேர், ஜிப்மரில் 30 பேர், கொரோனா கேர் சென்டர் 41 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 6 பேர் என மொத்தம் 102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில் ஒரே நாளில் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதாவது புதுவை சோலைநகரைச் சேர்ந்த 71 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த 25-ந் தேதி தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த 31-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். முதலியார்பேட்டை பிராமினாள் வீதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த 28-ந் தேதி சேர்க்கப்பட்டார். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களை சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.

மாநிலத்தில் இதுவரை 3,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,515 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,411 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் 41,540 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 388 பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

ஊரடங்கு தளர்வுக்குப்பின் மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளி, கைகளை கழுவுவது போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story