தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கபினி அணை நிரம்பியது வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்


தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கபினி அணை நிரம்பியது வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 5 Aug 2020 1:10 AM IST (Updated: 5 Aug 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

வயநாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு உள்ளது. தற்போது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் (ஜூலை) இறுதி வரை கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாடு மற்றும் மைசூரு, குடகு மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யாமல், அவ்வப்போது பெய்து வந்தது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை கண்ணாம்பூச்சி காண்பித்து வந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு சீராக இல்லாமல் இருந்தது.

அணை நிரம்பியது

இந்த நிலையில், ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் மைசூரு, குடகு மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி மற்றும் அதற்கும் குறைவாக நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இதன்காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே, மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில், 2,280 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடி பாக்கி உள்ள நிலையில், தண்ணீரை 2,280 அடியில் நிறுத்திக் கொண்டு கபினி அணை நிரம்பியதாக நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

மேலும் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கபினி அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது, அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு அதாவது, வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபிலா ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தண்ணீர் கபிலா, காவிரி ஆறு வழியாக தமிழகத்துக்கு செல்கிறது.

கே.ஆர்.எஸ். அணை

இதேபோல, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 105.70 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,056 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4,713 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால், இன்னும் சில நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34,713 கனஅடி தண்ணீர் செல்கிறது

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 34,713 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகம் நோக்கி செல்கிறது. குடகு மற்றும் வயநாட்டில் தொடர்ந்து இதே மழை நீடிக்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story