கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா மணிப்பால் மருத்துவமனையில் அனுமதி


கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா மணிப்பால் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 4 Aug 2020 7:53 PM GMT (Updated: 4 Aug 2020 7:53 PM GMT)

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனாவில் இருந்து சித்தராமையா குணமடைய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு,

சீனாவில் உருவான கொடிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் ருத்ரதாண்டவமாடி வரும் கொரோனா, பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. உலக நாடுகள் பட்டியலில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. பாமரன் முதல் உயர் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் வரை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோரையும் கொரோனா தனது வலையில் வீழ்த்தி உள்ளது. உத்தர பிரதேச பெண் மந்திரி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

நாடு முழுவதும், கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகள்

ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல் ஆகியோரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, அனில் பெனகே, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், பாரண்ணா முனவள்ளி, பசவராஜ் மத்திமோட், ஹாலப்பா ஆச்சார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவண்ணா, அஜய்சிங், பிரசாந்த் அப்பய்யா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, ரங்கநாத், பரமேஸ்வர் நாயக், ராகவேந்திர ஹித்னால், புட்டரங்கஷெட்டி, ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்கவுடா, நாகனகவுடா, சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, எம்.பி.க்கள் சுமலதா, பகவந்த் கூபா, எம்.எல்.சி.க்கள் பிரானேஷ், சந்தேஷ் நாகராஜ், சந்திரசேகர் பட்டீல், பிரசன்னகுமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சித்தராமையாவுக்கு கொரோனா

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பாதாமி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் சிகிச்சைக்காக பெங்களூரு விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் 5-வது தளத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த மருத்துவமனையில், இதே தளத்தில் தான் முதல்-மந்திரி எடியூரப்பாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

சித்தராமையாவுக்கு கொரோனா பாதித்த தகவலை அவர் மகனும், வருணா தொகுதி எம்.எல்.ஏ.வுமான யதீந்திரா நேற்று உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது தந்தைக்கு(சித்தராமையா) நேற்று(அதாவது நேற்று முன்தினம்) காய்ச்சல் இருந்தது. மேலும் அவருக்கு கொரோனா அறிகுறியும் தெரிந்தது. இதனால் மணிப்பால் மருத்துவமனையில் எனது தந்தைக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று கூறியிருந்தார்.

சுய தனிமைப்படுத்தலுக்கு...

இந்த நிலையில் சித்தராமையா வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், ‘எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நான் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டேன். இதில் எனக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நான் டாக்டர்களின் அறிவுரையின்பேரில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதே நேரத்தில் மருத்துவமனை நிர்வாகமும் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறி உள்ளது.

மாநில மக்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து சித்தராமையா விரைவில் குணமடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திரிகள், காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சித்தராமையா குணமடைய வேண்டி மாநிலத்தில் உள்ள கோவில்களில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

முதல்-மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மாநில மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Next Story