தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Aug 2020 1:12 AM GMT (Updated: 7 Aug 2020 1:12 AM GMT)

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி மதுராந்தகத்தை அடுத்த வையாவூர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், படாளம் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, மதுராந்தகம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களுக்கு விரைவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story