சுரண்டை அருகே வாலிபர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 4 பேர் கைது


சுரண்டை அருகே வாலிபர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2020 7:17 AM IST (Updated: 7 Aug 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே வாலிபர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 55). ஆடுகளை வளர்த்து வரும் இவர், தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நாச்சியார்புரம் வயல்வெளியில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தார். கடந்த 4-ந்தேதி இரவில் அந்த ஆட்டுக்கிடைக்கு வந்த பக்கத்து ஊரான நெட்டூரைச் சேர்ந்த சிலர் ஆடுகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே கண்விழித்த அய்யனார் தன்னுடைய உறவினரான கிடாரக்குளத்தைச் சேர்ந்த பட்டனுக்கு (51) செல்போனில் தகவல் தெரிவித்து, அங்கு வரவழைத்தார். இதனால் அய்யனார் தரப்பினருக்கும், ஆடு திருட முயன்ற கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த நெட்டூரைச் சேர்ந்த சண்முகையா மகன் விஜய் என்ற முத்துபாண்டி (24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேர் படுகாயம்

மேலும் படுகாயம் அடைந்த அவரது நண்பரான நெட்டூரைச் சேர்ந்த முருகன் மகன் பார்த்தீபனை (25) மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேபோன்று அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மற்றொரு தரப்பான பட்டன், அவருடைய மகன்கள் காளிராஜன் (24), உச்சிமாகாளி (22) ஆகிய 3 பேரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தந்தை-மகன்கள் உள்பட4 பேர் கைது

இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும் வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பட்டன், அவருடைய மகன்கள் காளிராஜன், உச்சிமாகாளி, கயத்தாறு அருகே மேல இலந்தைகுளம் உலகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் செல்லத்துரை (37) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான பட்டன், காளிராஜன், உச்சிமாகாளி ஆகிய3 பேருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story