மதுரைக்கு ரூ.1,200 கோடியில் முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


மதுரைக்கு ரூ.1,200 கோடியில் முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 10:40 AM IST (Updated: 7 Aug 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரிய ஆஸ்பத்திரி ரூ.305 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும், மதுரை நகருக்கான முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,200 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மதுரை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் இதுவரை 1 லட்சத்து 63 ஆயிரத்து 492 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 3 அரசு ஆஸ்பத்திரிகளில் 1,518 படுக்கை வசதிகளும், 35 தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,124 படுக்கை வசதிகளும், 3 கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 1,150 படுக்கை வசதிகளும், ஒரு தனியார் மையத்தில் 520 படுக்கை வசதிகளும் உள்ளன.

மதுரை மாநகரில் 4 ஆயிரம், புறநகரில் 8 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தினமும் 400 ஆக இருந்த தொற்று தற்போது 106 ஆக குறைந்து உள்ளது. மதுரை மாநகரில் 35, புறநகரில் 49 என மொத்தம் 84 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ரூ.131 கோடியே 69 லட்சம் செலவில் 4 அடுக்கு கட்டிடம் கட்டுவதற்கும், ரூ.173 கோடியே 43 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.305 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. ரூ.3 கோடியே 6 லட்சம் செலவில் கேத்லேப் பெரிய ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.1,890 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.158 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலூர் குடிநீர் திட்டம் ரூ.884 கோடியில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உசிலம்பட்டி-சோழவந்தானில் வைகையை ஆதாரமாக கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பெரியார் பஸ் நிலையம் ரூ.163 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. புராதன சின்னங்களை மேம்படுத்த ரூ.42 கோடியிலும், நான்குமாசி வீதிகளை சீரமைக்க ரூ.53.65 கோடியிலும், பல்லடுக்கு வாகன காப்பக கட்டுமானப்பணி ரூ.41 கோடியிலும், வைகை ஆற்றை மேம்படுத்த ரூ.84 கோடியிலும், தமுக்கம் மைதானத்தில் ரூ.47 கோடி செலவிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர ரூ.275 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.25 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ரூ.30 கோடி செலவில் தெருவிளக்கு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் கொண்டு வர ரூ.1,200 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வனத்துறையிடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் மதுரை மாவட்ட மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் வருகிற நவம்பர் வரை விலையின்றி வழங்கப்படும். அதே போல அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மீண்டும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது. 97 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 52 பெரிய தொழிற்சாலைகளில் 27 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். 48 ஆயிரத்து 428 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 2 லட்சத்து 41 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர கோ.புதூர் மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டைகளில் 535 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலூர் அம்பலகாரன்பட்டி மற்றும் சக்கிமங்கலத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஏராளமான நிறுவனங்கள் மதுரையில் பல ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தொழில்களை தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தில் மதுரையில் விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைகை ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் இரண்டு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ.3 கோடியே 3 லட்சம் செலவில் வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வைகை ஆற்றின் இருபுறமும் ரூ.303 கோடியே 51 லட்சம் செலவில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் ரூ.52 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. செக்கானூரணியில் ரூ.68 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கோச்சடை சந்திப்பில் ரூ.42 கோடி செலவில் சாலை மேம்படுத்தப்படுகிறது. கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. அங்கு நில எடுப்பிற்காக ரூ.164 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.48 கோடி செலவில் நகரின் மைய பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இ-பாஸ் பெறுவதில் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறதே?

பதில்:- இ-பாஸ் வழங்கும் பணியினை ஒரு குழு தான் மேற்கொண்டு வந்தது. தற்போது மேலும் அதனை எளிமைப்படுத்துவதற்காக மற்றொரு குழு அமைக்கப்பட உள்ளது. உதாரணமாக மதுரையில் 500 இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தால் இன்னும் கூடுதலாக 500 வழங்க குழு நியமித்து உள்ளோம். தமிழகம் முழுவதும் ஒரு குழு இயங்கி வந்தது. இன்று முதல் மேலும் ஒரு குழு

கேள்வி:- இ-பாஸ் வழங்குவது ஊழலுக்கு வழிவகுக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்:- ஊழலுக்கு வழிவகை இருக்க கூடாது என்பதற்காக கூடுதலாக மற்றொரு குழு அமைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டு உள்ளது. ஒரு நிறுவனம் தங்களது பணியாளர்களின் பட்டியலை கொடுத்தால் அதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி தருவார்கள். இந்த பாஸ்சினை ஒரு மாதத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். மீண்டும் அடுத்த மாதத்திற்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம். இ-பாஸ் முறையை பொறுத்தவரை தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு எந்த இடையூறுமின்றி வழங்கப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் மக்கள் எங்கும் செல்லக்கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுப்பாடு வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு இருக்கின்ற காரணத்தால் மதுரையில் கூட நோய் பரவலை குறைத்திருக்கிறோம். கொரோனா நோய் பரவுதலை தடுக்க எந்ததெந்த முறைகளை கையாள வேண்டுமோ, அதனையெல்லாம் செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இடையூறு செய்வதற்காக இ-பாஸ் முறையை செயல்படுத்த வில்லை. அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் முறையாக இ-பாஸ் பெற்று கொள்ளலாம்.

கேள்வி:- தென்மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- தென்மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. நிலம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. அதே போல் தொழில் முதலீட்டிலும் மானியம் தருகிறோம். இதன்காரணமாக தற்போது தூத்துக்குடியில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கேள்வி:- கொரோனா விஷயத்தில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- காய்ச்சல் முகாம் நடத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சுகாதார துறையினர் அளிக்கும் பரிந்துரையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதில் அடுத்த கட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

கேள்வி:- மதுரையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என்ற புகார் உள்ளதே?

பதில்:- எல்லோரும் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். அரசின் சார்பாக தனியார் ஆஸ்பத்திரிகள் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- கொரோனா மரணம் தமிழகத்தில் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?

பதில்:- எதிர்க்கட்சிகள் எந்த அடிப்படையில் இந்த குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகிறார்கள், எத்தனை பேர் தினமும் இறக்கிறார்கள் என்பதனை தெளிவாக சொல்கிறோம். இதில் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்வது தமிழகத்தில் தான். எனவே பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை தருகிறோம். ஆனால் இதனையெல்லாம் எதிர்க்கட்சிகள் பாராட்டுவதில்லை. இது சவாலான நேரம். குற்றம் சுமத்துவது தான் அவர்களது வாடிக்கையாக உள்ளது.

கேள்வி:- இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-ம் இடத்தில் அல்லவா இருக்கிறது?

பதில்:- தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு இருக்கிறோம். மற்ற மாநிலங்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சரியாக கண்டுபிடிக்கவில்லை. எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களில் இன்னும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படாது. ஆனால் தற்போது தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியும்.

இப்போது சில மாநிலங்களில் 25 ஆயிரம் பேரை பரிசோதனை செய்தால் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு இருக்கிறது. ஆனால் இங்கு 60 ஆயிரம் பேரை பரிசோதனை செய்தால் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு வருகிறது என்று எண்ணிப்பாருங்கள். தமிழகத்தில் நோய் பரவலை தடுப்பதற்காக அதிக பரிசோதனை செய்து இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் இப்போது குறைந்த பரிசோதனையில் அதிக பாதிப்பை உணர்ந்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மக்களை காக்க வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சிக்கு தான் இருக்கிறது. அந்த பணியினை ஜெயலலிதாவின் இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று இரவில் மதுரையில் தங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை நெல்லை செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நிறைவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். மேலும், ரூ.208 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.


Next Story