இலங்கை ரவுடி இறப்பு குறித்து கோவையில் இந்திய உளவு அமைப்பு குழுவினர் ஆய்வு: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின


இலங்கை ரவுடி இறப்பு குறித்து கோவையில் இந்திய உளவு அமைப்பு குழுவினர் ஆய்வு: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
x
தினத்தந்தி 7 Aug 2020 6:13 AM GMT (Updated: 7 Aug 2020 6:13 AM GMT)

இலங்கை ரவுடி இறந்தது குறித்து கோவையில் இந்திய உளவு அமைப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை,

இலங்கையை சேர்ந்தவர் அங்கடலக்கா (வயது 36). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிரபல ரவுடியான அங்கடலக்கா மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. கடந்த 2017-ம் ஆண்டு 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தலைமறைவான அவரை தேடப்படும் குற்றவாளியாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில் கோவை சேரன்மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில் பதுங்கி இருந்த அங்கட லக்கா மாரடைப்பால் இறந்ததாக கூறி அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த அங்கடலக்காவின் காதலி அமானி தான்ஜி, மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட 7 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அங்கட லக்கா போலி ஆவணம் தயாரித்து தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் தனது காதலி அமானிதான்ஜியுடன் தங்கி இருந்து வந்தார். அவருக்கு மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் உதவி உள்ளனர். இந்தநிலையில் அங்கடலக்கா கோவையில் இருந்தவாரே வாட்ஸ்-அப் குரூப் மூலம் தனது கூட்டாளிகளை ஏவி இலங்கையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் அதுருகிரியா, முல்லேரியாவா, கோதாதுவா, கேன் வெல்லா ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேரை சுட்டுக் கொன்றது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவையில் இறந்தது அங்கட லக்கா தானா? என்பதை கண்டறிய மரபணு சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக அங்கட லக்காவுக்கு நடந்த பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட உடற்கூறுகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சென்னையில் உள்ள தடய அறிவியல் அலுவலகத்துக்கு சென்று பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

இலங்கை ரவுடி சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்தவர் என்பதால் இந்திய உளவு அமைப்பின் (ரா) 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் கோவை வந்தனர். கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஐ.ஜி. சங்கர் தலைமையில் இந்திய உளவு அமைப்பு குழுவினருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய உளவு அமைப்பு குழுவினர் அங்கடலக்கா தொடர்பான தகவல்களை பெற்றுச் சென்றனர்.

அங்கட லக்காவுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீஸ் ஐ.ஜி.சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அங்கட லக்காவுக்கு யார் யாருடன் தொடர்பு இருந்தது என்பது குறித்து தனிப்படை போலீசார் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். கைதான சிவகாமி சுந்தரியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தோம். அதில் 7 வங்கி கணக்குகளில் ஒரு கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தொகை அங்கட லக்காவுக்கு உதவி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

சிவகாமி சுந்தரியின் தந்தை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது. அவர் மீது மதுரை போலீசில் வழக்கும் உள்ளது. எனவே அவர் தனது மகள் சிவகாமி சுந்தரி மூலம் அங்கட லக்காவுக்கு உதவி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதவிர அங்கடலக்காவுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சிறப்பு குழு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அங்கட லக்காவின மரபணு பரிசோதனை முடிவு 4 நாட்களில் கிடைக்கும். அவரது உறவினர்களிடம் மரபணு பரிசோதனை நடத்தி, 2 மரபணு சோதனை முடிவுகளும் ஒன்றுபோல் இருக்கும்பட்சத்தில் இறந்தது அங்கடலக்கா தானா என்பது தெரியவரும்.

கைதான 3 பேரையும் அடுத்த வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கட லக்கா தங்கியிருந்த வீட்டில் சத்துமாவு பாக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. அதில் விஷம் எதுவும் கலக்கப்பட்டு உள்ளதா? அல்லது போதை மருந்து எதுவும் கலக்கப்பட்டு உள்ளதா? என்பதை அறிய ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story