பவானி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை


பவானி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2020 11:54 AM IST (Updated: 7 Aug 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை காரணமாக பவானி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இங்கு கோவை, நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.

பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந் தேதி காலையில் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயரம் 95 அடியில் இருந்து 97 அடி உயரத்தை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 95.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அன்று மாலை அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் அணையின் நீர்மட்ட உயரம் 96 அடியாக குறைந்தது. பின்னர் அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவு 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 95.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டத்தை ஒரே சீராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 3-வது நாளாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலம் அருகே கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் கோவிலின் பாதியளவு கட்டிடம் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது நாளாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.


Next Story