மராட்டியத்தில் புதிதாக 10,483 பேருக்கு கொரோனா மும்பையில் 862 பேர் பாதிப்பு


மராட்டியத்தில் புதிதாக 10,483 பேருக்கு கொரோனா மும்பையில் 862 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 8:08 PM GMT (Updated: 7 Aug 2020 8:08 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மும்பையில் 862 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதும் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை, பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 262 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 281 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 1 லட்சத்து 45 ஆயிரத்து 582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 66.76 ஆக உள்ளது.

300 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் மேலும் 300 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 17 ஆயிரத்து 92 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் மும்பையை தவிர மற்ற பகுதிகளில் தொடர்ந்து நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. புனே மாநகராட்சியில் நேற்று புதிதாக 1,395 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 905 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பை, தானே

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 862 பேருக்கு வைரஸ் நோய் கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 12 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல 45 பேர் பலியானதால் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 693 ஆக உயர்ந்து உள்ளது.

இதுதவிர தானே மண்டலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் மொத்த பாதிப்பு விவரம் வருமாறு:-

தானே புறநகர் - 175 (மொத்த பாதிப்பு-14,856), தானே மாநகராட்சி - 188 (22,211), நவிமும்பை மாநகராட்சி - 385 (19,459), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 252 (24,563), உல்லாஸ்நகர் மாநகராட்சி - 20 (7,296), பிவண்டி - 9 (3,958), மிரா பயந்தர் - 73 (9,634), வசாய் விரார் - 135 (13,262).

Next Story