இயக்குனர்-மனைவி செல்போன் எண்கள் ஆபாச இணையதளத்தில் பதிவு தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு


இயக்குனர்-மனைவி செல்போன் எண்கள் ஆபாச இணையதளத்தில் பதிவு தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Aug 2020 8:29 PM GMT (Updated: 7 Aug 2020 8:29 PM GMT)

பெங்களூருவில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் தர தாமதப்படுத்தியதால், தனியார் நிறுவன இயக்குனர், அவரது மனைவியின் செல்போன் எண்களை ஆபாச இணையதளத்தில் பதிவு செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக வேலை செய்து வருபவர் அவினாஷ் பிரபு. இதுபோல அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருபவர் ஹரிபிரசாத் ஜோஷி. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தனக்கு பணம் தர வேண்டும் என்று அவினாசிடம், ஹரிபிரசாத் கேட்டு இருந்தார். ஆனால் கொரோனாவால் நிறுவனம் மூடப்பட்டு இருந்ததால், நிறுவனத்தில் போதிய வருமானம் இல்லை என்று அவினாஷ் கூறி உள்ளார்.

மேலும் கொரோனா பிரச்சினையை காரணம் காட்டி ஹரிபிரசாத்துக்கு பணம் வழங்க அவினாஷ் தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவினாசை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தனக்கு பணம் வழங்கும்படி ஹரிபிரசாத் கேட்டு வந்து உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது.

ஆபாச இணையதளத்தில் பதிவு

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிபிரசாத், அவினாசின் செல்போன் எண்ணையும், அவரது மனைவியின் செல்போன் எண்ணையும் ஆபாச இணையதளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. மேலும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் இந்த செல்போன் எண்ணை அழையுங்கள் என்று அவினாசின் செல்போன் எண்ணை அவர் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவினாசின் பெயரில் செக்ஸ் பொம்மைகளை ஆன்-லைனில் ஆர்டர் செய்து அதை நிறுவன முகவரிக்கு வரும்படியும் ஹரிபிரசாத் செய்து உள்ளார்.

இதுபற்றி அறிந்த அவினாஷ் மத்திய சைபர் கிரைம் போலீசில், ஹரிபிரசாத் மீது புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின்பேரில் 419(ஆளுமை மூலம் மோசடி செய்தல்) மற்றும் 509(பெண்ணின் ஒழுக்கத்தை அவமதிக்கும் செயல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஹரிபிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஹரிபிரசாத்தை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story