பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு


பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 8:36 PM GMT (Updated: 7 Aug 2020 8:36 PM GMT)

பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் யாதகிரி-ராய்ச்சூர் இடையே போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

விஜயாப்புரா,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குடகு, சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய மலைநாடு மாவட்டங்களிலும், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களிலும், விஜயாப்புரா, பெலகாவி, பல்லாரி, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய வடகர்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மேலும் மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தி தாலுகா அலமட்டியில் உள்ள அணையும், யாதகிரி மாவட்டம் நாராயணபுராவில் உள்ள பசவசாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

3.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

கடல் மட்டத்தில் இருந்து 492.25 அடி உயரம் கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 491.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அதே சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 82 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 519.63 அடி உயரம் கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 518.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு கிருஷ்ணா ஆற்றில் 3 லட்சத்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது.

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு யாதகிரி-ராய்ச்சூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. அதுபோல உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அந்த அணையில் இருந்து நேற்று மதியம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் காளி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காளி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

குடகில் நிலச்சரிவு

இதற்கிடையே குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைக்காவிரி அருகே பிரம்மகிரி பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் 2 வீடுகள் புதைந்தன. அர்ச்சகர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என 5 பேர் அதில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி 2-வது நாளாக நேற்று தொடர்ந்து நடந்தது.

இதுபோல சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பத்ரா, துங்கா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலேஒன்னூர், சிருங்கேரி பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. சார்மடி மலைப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கனமழைக்கு 2 விவசாயிகள் பலியாகி உள்ளனர்.

Next Story