நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 512 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் ஒருவர் பலி


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 512 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2020 11:22 PM GMT (Updated: 7 Aug 2020 11:22 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவர் பலியானார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 63 பேரும், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 14 பேர், மானூர் பகுதியில் 16 பேர், சேரன்மாதேவி பகுதியில் 27 பேர் என அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 902 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2 ஆயிரத்து 294 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு சிகிச்சை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒருவர் சாவு

நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வுக்கு இதுவரை 69 பேர் இறந்து உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 204 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 123 பேரும், அரசு சித்தா கல்லூரியில் இருந்து 29 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 117 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 748 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 1,828 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 877 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 43 பேர் பலியாகி உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 648 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 797 ஆக உயர்ந்து உள்ளது. 1,784 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 67 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 512 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story