வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை


வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2020 6:02 AM IST (Updated: 8 Aug 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனியை சேர்ந்தவர் சுந்தர். இவர் சென்னையில் சுங்கவரி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருள்மொழி (வயது 48). இவர் வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஷமீதா (24). திருமணமாகவில்லை. இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றினார்.

ஷமீதா நேற்று வீட்டில் இருந்தார். அவர் பிற்பகல் நேரத்தில் தாயாருடன் செல்போனில் பேசினார். இந்தநிலையில் அலுவலக பணியை முடித்து விட்டு அருள்மொழி மாலையில் வீடு திரும்பினார்.

அப்போது, ஷமீதா கதவை திறக்கவில்லை. உள்பக்கமாக கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அருள்மொழி பால்கனி வழியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஷமீதா சுயநினைவின்றி மர்மமான முறையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தசம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘ஷமீதாவின் தாயார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு ஷமீதா வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளார். ஒருவேளை அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கருதுகிறோம். எனினும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும். விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Next Story