ஈரோடு மாவட்டத்தில் அதிவேகமாக பரவுகிறது: ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா - மேலும் ஒரு முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது. ஒரே நாளில் 67 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒரு முதியவர் பலியானார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு 70 பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. வெளிமாவட்டம், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து சென்றதால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சில நாட்கள் பாதிப்பு கூடுவதும், மற்ற நாட்கள் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று முன்தினம் 62 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டார்கள். நேற்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 955 ஆக உயர்ந்தது. அருகில் உள்ள திருப்பூர், கோவை மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தபோதும், ஈரோடு மாவட்டத்தில் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருவதால் ஈரோடு மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மாநகராட்சிக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம், மணிக்கூண்டு, 46 புதூர் என்.கே.வலசு, நேதாஜிரோடு, கொத்துகாரன்தோட்டம், பெரியசேமூர், நல்லிதோட்டம் பகுதி, வீரப்பன்சத்திரம் திரு.வி.க. வீதி, பழைய ரெயில் நிலையம் பகுதி, சூரம்பட்டிவலசு, ஆர்.என்.புதூர் போலீஸ் குடியிருப்பு பகுதி, வீரப்பன்சத்திரம், ராஜாஜிபுரம் கிருஷ்ணம்பாளையம் காலனி, பெரியசெட்டிபாளையம், வீரப்பன்பாளையம், மாணிக்கம்பாளையம், சூரம்பட்டி அண்ணாவீதி, பெரியவலசு ராதாகிருஷ்ணன் வீதி, வீரப்பன்சத்திரம் காவிரிரோடு, திருநகர்காலனி வாட்டர் ஆபீஸ்ரோடு, ஜீவானந்தம்ரோடு, சம்பத்நகர், பெரியசேமூர் தென்றல் நகர், சேக்தாவூத் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் அம்மாபேட்டை அருகே பூதப்பாடி, பவானி செந்தம்பாளையம், சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம் கே.கே.நகர் முதலாவது வீதி, மைலம்பாடி, சென்னிமலை, மொடக்குறிச்சி அருகே கணபதிபாளையம், காந்திஜிவீதி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 646 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று 10 பேர் குணமடைந்தார்கள். 295 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒரு முதியவர் பலியாகி உள்ளார். ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 66 வயதான அவர் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 1-ந் தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் 5-ந் தேதி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தொழில் விஷயமாக வெளியே சென்று வருபவர்கள் தங்களை தாங்களே பாதுகாப்புடன் கவனித்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அங்கு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி, ரத்த மாதிரி எடுக்கப்படும். இவ்வாறு உடனுக்குடன் பரிசோதனை செய்யப்பட்டால், நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story