ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொற்று உறுதி
ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி செயற்பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் பணிபுரியும் 140 ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த ஒரு வாரகாலமாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story