ரூ.300 கோடி மோசடி நடந்ததாக வழக்கு: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ராமநாதபுரத்தில் விசாரணைக்கு ஆஜர்
ரூ.300 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் சினிமாபட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் அவர் பரபரப்பு பேட்டி அளித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் பணம் திரட்டி ஏராளமானோரிடம் ரூ.300 கோடி அளவில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நீதிமணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சதுரயுகவள்ளி நகரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமணியின் மனைவி மேனகாவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் நீதிமணி மற்றும் ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நீதிமணி தாங்கள் வசூலித்த பணத்தின் மூலம் தருண் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் ஆரம்பித்து, அதன் மூலம் காப்பான், மகாமுனி, தடம், மிஸ்டர் லோக்கல் ஆகிய தமிழ்படங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக 7ஜி சிவா, வினியோகஸ்தர் சென்னை முருகானந்தம், ஸ்டூடியோ கிரீன் உரிமையாளரும், படதயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா ஆகியோர் மூலம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 7ஜி சிவா, முருகானந்தம், ஞானவேல்ராஜா ஆகியோரை ராமநாதபுரம் பஜார் போலீசார் மேற்கண்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடந்த மாதம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்நி்லையில் இந்த சம்மனுக்கு ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு ஞானவேல்ராஜா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகஸ்டு 7-ந் தேதி (அதாவது நேற்று) ராமநாதபுரம் போலீசில் நேரில் ஆஜராகுமாறும், தவறினால் காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி நேற்று மாலை 4 மணி அளவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது வக்கீல் பாரத் என்பவரின் மூலம் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்பின்னர் வெளியே வந்த ஞானவேல்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாமுனி திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கிய நீதிமணி என்பவர் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதில் எனக்கு என்ன தகவல் தெரியும் என்பதை அறிவதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதன்படி விசாரணைக்கு வந்துள்ளேன். மீண்டும் நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளனர். இந்த மோசடி குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்தான் விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோசடி புகார் தொடர்பாக, ஞானவேல் ராஜாவிடம் ஏறத்தாழ 60 கேள்விகள் கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக கூறப்படும் வழக்கில் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் விசாரணைக்கு ஆஜரானது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு தடை
ஸ்டூடியோ கிரீன் சினிமா நிறுவனத்தின் உரிமையாளரும், பட தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு மகாமுனி என்ற சினிமா தயாரித்தோம். இந்த படத்தின் தியேட்டர் உரிமையை நீதிமணி என்பவர் பங்குதாரராக இருந்த தருண் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றது. இதற்காக ரூ.6 கோடியே 25 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டது. முதல்கட்டமாக ரூ.2 கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது. மீத தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால் அந்த நிறுவனம் மீது சினிமா துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி ராமநாதபுரம் போலீசார் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதாவது நிதி நிறுவனத்துக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தை சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரில் நீதிமணி மற்றும் சிலருடன் என் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்பேரில் என் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் எனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதற்கிடையே நான் ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே ராமநாதபுரம் பஜார் போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கியும், போலீசார் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஞானவேல்ராஜா, ராமநாதபுரம் பஜார் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதாடினார். முடிவில், மனுதாரரை வருகிற 14-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story