பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி லாரி கிளனர் கொலை மனைவியின் 2-வது கணவருக்கு வலைவீச்சு


பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி லாரி கிளனர் கொலை மனைவியின் 2-வது கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Aug 2020 4:05 AM IST (Updated: 9 Aug 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி லாரி கிளனர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவியின் 2-வது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூரு பசவனகுடி அருகே சுப்பனஷெட்டி ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரோந்து சென்ற போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபரை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது போன்ற எந்த விவரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

ஆயுதங்களால் தாக்கி கொலை

அதாவது கொலையானவர் பெயர் சித்தராஜூ(வயது 26) என்பது தெரியவந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலை சேர்ந்த சித்தராஜூ, பெங்களூருவில் லாரி கிளனராக வேலை செய்து வந்தார். மேலும் பெங்களூருவை சேர்ந்த லதா(28) என்பவரையும் சித்தராஜூ திருமணம் செய்து இருந்தார்.

ஆனால் சித்தராஜூ தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அவரை லதா பிரிந்து சென்றார். பின்னர் பூ வியாபாரியான லட்சுமண் என்கிற லட்சியை லதா திருமணம் செய்து இருந்தார். இதுபற்றி அறிந்த சித்தராஜூ தினமும் லதாவிடமும், அவரது தாயிடமும் தகராறு செய்து உள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் சித்தராஜூவை, லட்சுமண் எச்சரித்து உள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து லதாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த லட்சுமண், தனது நண்பர்களுடன் சேர்ந்து சித்தராஜூவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள லட்சுமண், அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story