உரம் வாங்க நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்


உரம் வாங்க நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 8 Aug 2020 11:07 PM GMT (Updated: 8 Aug 2020 11:07 PM GMT)

விவசாயத்துறை மந்திரியின் சொந்த மாவட்டமான ஹாவேரியில் உரம் வாங்க விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

ஹாவேரி, 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக உரத்தை கொள்முதல் செய்வதில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கத்திலும் உர மூட்டைகள் கையிருப்பில் உள்ளது என்றும், இதனால் விவசாயிகள் ஆதங்கப்பட வேண்டாம் எனவும் விவசாயத் துறை மந்திரி பி.சி.பட்டீல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். ஆனால் இதை நம்பி கூட்டுறவு சங்கத்திற்கு செல்லும் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பது இல்லை.

எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் உர தட்டுப்பாட்டு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீலின் சொந்த மாவட்டமான ஹாவேரியிலும் கடும் உர தட்டுப்பாட்டு நிலவுகிறது. தற்போது அந்த மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், விவசாய பணிகளில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

முண்டியடிக்கும் விவசாயிகள்

ஹாவேரி, பேடகி, ராணிபென்னூர், இரேகெரூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகங்களுக்கு விவசாயிகள் அதிகாலையிலேயே சென்று அங்கு நீண்ட வரிசையில் காத்து கிடந்து உரங்களை வாங்கி செல்கின்றனர். அப்போது உரத்தை வாங்கி செல்ல விவசாயிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு செல்வதால் அங்கு சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்து விடுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உர தட்டுப்பாடு இல்லை என்று கூறி மந்திரி பி.சி.பட்டீலை கண்டித்து ஹாவேரி மாவட்டத்தில் சில பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

Next Story