கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது


கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது
x
தினத்தந்தி 9 Aug 2020 6:07 AM IST (Updated: 9 Aug 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் நேற்று 924 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 268 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 109 பேர் கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 43 பேர் ஜிப்மரிலும், 11 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 38 பேர் காரைக்காலிலும், 2 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 65 பேர் காத்திருப்பில் உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 5,087 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,953 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதுவையில் 559 பேர், ஏனாமில் 48 பேர் என 607 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 45,954 பரிசோதனை செய்யப்பட்டதில் 39,960 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 409 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது.

5 பேர் உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதுவையில் 3 பேர், காரைக்காலில் 2 பேர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எல்லப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த 58 வயது பெண் ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 5-ந் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உருளையன்பேட்டை சுப்பையா நகரை சேர்ந்த 78 வயது முதியவர் ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 27-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

காரைக்கால்

காரைக்கால் தர்மபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண் நபர் நீரிழிவு நோய், குளிர் காய்ச்சலுடன் நேற்று முன்தினம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரைக்கால்மேடு ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி உணவு குழாய் பாதிப்புடன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த 5-ந் தேதி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சரின் மகன்

புதுச்சேரி முத்தியால்பேட்டை செயிண்ட் ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 57). அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காசிலிங்கத்தின் மகனான இவர் லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமை கரும்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் சிகிச்சைக்காக அவரை ஜிப்மரில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.57 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story