ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் கால தாமதமின்றி பொருட்கள் வழங்க கோரிக்கை
அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கால தாமதமின்றி வழங்கக்கோரி கருகம்புத்தூர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
வேலூர் கருகம்புத்தூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் செவ்வாய், சனி ஆகிய 2 நாட்கள் மட்டும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ரேஷன்கடை விற்பனையாளர், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சரியாக வழங்கவில்லை என்றும், மேலும் பொருட்களை காலம் கடத்தி வழங்கியதாகவும், கூடுதலாக வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரே தவணையாக வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை விற்பனையாளரிடம் தெரிவித்தும், அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சரியான அளவில் காலம் தவறாமல் வழங்க வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர்.
கோரிக்கை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ரேஷன்கடை விற்பனையாளர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். எனவே குறிப்பிட்ட நாட்களில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும், கால தாமதமின்றி மாதந்தோறும் அரசு வழங்கும் அனைத்துப் பொருட்களையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு அவர், ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வைக்க போதிய இடவசதி இல்லை. இதனால் சரியாக பொருட்கள் வழங்க முடியவில்லை. இனிவரும், நாட்களில் காலம் தாமதமின்றி பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story