கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி உடல் மும்பை கொண்டு வரப்பட்டது


கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி உடல் மும்பை கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 9 Aug 2020 7:22 PM GMT (Updated: 9 Aug 2020 7:22 PM GMT)

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டது. உடலுக்கு விமானிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மும்பை, 

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. அதன்படி துபாயில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியபோது சறுக்கி சென்று 35 அடி பள்ளத்தில் பாய்ந்து 2 ஆக உடைந்தது.

இந்த விபத்தில் மும்பையை சேர்ந்த விமானி கேப்டன் தீபக் சாத்தே உள்பட 19 பேர் பலியாகினர். இதில் விமானி தீபக் சாத்தே விமானத்தை விபத்தில் இருந்து காப்பாற்ற கடைசி வரை போராடி உயிர்நீத்தார்.

உடல் மும்பை வந்தது

தீபக் சாத்தே குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் விமானி தீபக் சாத்தேயின் உடல் நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது விமான நிலையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு ஏர் இந்தியா விமானிகள் மற்றும் ஊழியர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உடல் அருகே தீபக் சாத்தேயின் மனைவி, மகன் கண்ணீர் மல்க இருந்தனர்.

மற்றொரு மகன் அமெரிக்காவில் இருந்து திரும்ப வேண்டியது இருப்பதால் உடல் பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீபக் சாத்தேயின் சொந்த ஊர் நாக்பூர் ஆகும். அங்கு அவரது தந்தை, தாய் வசித்து வருகின்றனர். அவர்களை மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story