திடீர் உடல் நலக்குறைவால் நடிகர் சஞ்சய் தத் ஆஸ்பத்திரியில் அனுமதி


திடீர் உடல் நலக்குறைவால் நடிகர் சஞ்சய் தத் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 10 Aug 2020 1:27 AM IST (Updated: 10 Aug 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

திடீர் உடல் நலக்குறைவால் நடிகர் சஞ்சய் தத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். 61 வயதான அவருக்கு, நேற்று முன்தினம் மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மாகிமில் உள்ள லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில், “எல்லோரிடமும் நான் நன்றாக உள்ளேன் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள விரும்பினேன். தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன். சோதனையில் எனக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்து உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவேன். உங்களின் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

சகோதரி கருத்து

இதேபோல சஞ்சய் தத்தின் சகோதரியும், முன்னாள் எம்.பி.யுமான பிரியா தத் கூறுகையில், “வழக்கமான பரிசோதனைக்காக எனது சகோதரர் லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

சஞ்சய் தத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த மார்ச் மாதம் முதல் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல சஞ்சய் தத் நடித்து உள்ள ‘சாதக் 2', ‘புஜ்', உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story