பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் 7¾ லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு


பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் 7¾ லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 2:31 AM IST (Updated: 10 Aug 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 7¾ லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், வடகர்நாடக மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

பெங்களூரு,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அந்த மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, யாதகிரி, விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் பாய்ந்தோடி வருகிறது.

இதனால் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுரா பகுதியில் அமைந்துள்ள பசவசாகர் அணை மற்றும் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தி தாலுகாவில் அமைந்து உள்ள அலமட்டி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கடல்மட்டத்தில் இருந்து 519.63 மீட்டர் கொள்ளளவு கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் 517.77 மீட்டராக இருந்தது. அதே வேளையில் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 647 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 61 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

7¾ லட்சம் கனஅடி

இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 492.25 மீட்டர் கொள்ளளவு கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் 491.01 மீட்டராக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து 4 லட்சத்து 15 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மொத்தத்தில் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7 லட்சத்து 78 ஆயிரத்து 268 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், கிருஷ்ணா ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக, அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

50 கிராமங்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் யாதகிரி, பாகல்கோட்டையில் உள்ள கிராமங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் 30 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பாகல்கோட்டை, யாதகிரி, பல்லாரி மாவட்டத்தில் உள்ள 50 கிராமங்களுக்கு நேற்று தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் கனமழைக்கு வடகர்நாடக மாவட்டங்களில் 26 பாலங்கள் மூழ்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ராகி, மக்காசோளம் பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. தொடர் கனமழையாலும், கிருஷ்ணா ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் வடகர்நாடக மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story