பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல்
பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல் நடத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஜா(வயது 56). இவருக்கும், இவரது உறவினர்களான குமார், மைக்கேல் உள்பட சிலருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ரோஜாவின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் மனம் உடைந்த ரோஜா, தீக்குளித்து தற்கொலை செய்தார்.
பாதிரிவேடு போலீசார் அவரது உறவினர்கள் மீது ரோஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் ரோஜாவை தற்கொலைக்கு துண்டியவர்களை கைது செய்யாததை கண்டித்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரோஜாவின் உடலை வாங்க மறுத்து மாதர்பாக்கம் பஜாரில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்மந்தபட்டவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து 1 மணிநேரத்துக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story