பெங்களூருவில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - கொலை செய்ததாக கணவர் மீது புகார்


பெங்களூருவில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - கொலை செய்ததாக கணவர் மீது புகார்
x
தினத்தந்தி 11 Aug 2020 3:45 AM IST (Updated: 11 Aug 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை கொலை செய்ததாக கணவர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

பெங்களூரு, 

தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டியை சேர்ந்தவர் சரண்யா(வயது 25). இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரண்யாவும், அவரது பள்ளி தோழரான ரோகித் என்பவரும் காதலித்து வந்தனர். ரோகித் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு சரண்யாவும், ரோகித்தும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் மடிவாளா அருகே வெங்கடபுரா பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரோகித் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சரண்யாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் அவர் சரண்யாவை அடித்து, உதைத்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சரண்யா தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். அவர்கள் சரண்யாவை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சரண்யா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி ரோகித், சரண்யாவின் பெற்றோருக்கும், மடிவாளா போலீசாருக்கும் தகவல் கொடுத்து இருந்தார். அதன்பேரில் மடிவாளா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சரண்யாவின் பெற்றோர் மடிவாளா போலீசில் ஒரு புகார் அளித்தனர்.

அதில் சரண்யா தற்கொலை செய்து கொள்ளவில்லை. சரண்யாவை, ரோகித் தான் கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அவரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story