பல்லாரியில், கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட மையம்
பல்லாரியில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
பல்லாரி,
வடகர்நாடகத்தில் உள்ளது பல்லாரி மாவட்டம். இந்த மாவட்டம் மராட்டியம், ஆந்திரா எல்லையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் பல்லாரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் பல்லாரியில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டி சென்று விட்டது. 111 பேரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது. இதில் 4 போலீஸ்காரர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் பல்லாரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீஸ்காரர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக பல்லாரி டவுன் கவுல்பஜாரில் உள்ள குவெம்பு கலையரங்கம் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.
நேற்று அந்த மையத்தில் பல்லாரி மாவட்ட கலெக்டர் நகுல், போலீஸ் சூப்பிரண்டு சி.கே.பாபா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சி.கே.பாபா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பல்லாரியில் போலீஸ்காரர்களை கொரோனா தாக்கி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு மாவட்டத்தில் 100 போலீஸ்காரர்கள் இறந்து உள்ளனர். இதனால் கொரோனா தாக்கும் போலீஸ்காரர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட மையம் தயாராகி வருகிறது. இதனால் போலீஸ்காரர்கள் விரைவில் குணம் அடைந்து பணிக்கு திரும்புவார்கள். போலீஸ்காரர்களின் நலனை பாதுகாப்பது எங்களது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story